Published : 29 Oct 2022 02:00 PM
Last Updated : 29 Oct 2022 02:00 PM

கோவை சம்பவம் | “சவால் விடுகிறேன்... தைரியம் இருந்தால் எனக்கு சம்மன் அனுப்புங்கள்” - அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: "காவல் துறையின் உயரதிகாரிகளில் நேர்மையான சில அதிகாரிகளின் கைகளை கட்டிப் போட்டுள்ளனர். இதனால் அமைச்சர் தேவையில்லாமல் வாயைத் திறக்கிறார். அந்த ஆவணங்களை வெளியிட்டால் மிகப் பெரிய பூதங்கள் இங்கு வெடிக்க ஆரம்பித்துவிடும். நான் சும்மா எதுவும் பேசவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "என்ஐஏ என்னை விசாரிக்க வேண்டுமென்று, சில அமைச்சர்கள் மற்றும் திமுகவின் எம்எல்ஏக்கள் எல்லாம் சொல்வதைப் பார்த்தேன். முதலில் என்னை என்ஐஏ விசாரித்தால், என்னிடம் உள்ள ஆவணங்களை அவர்களிடம் கொடுக்கப் போகிறேன். அந்த ஆவணங்கள் எப்படி வந்தது என்றும் சொல்லப்போகிறேன். எந்த அதிகாரி அதனை எனக்கு அனுப்பிவைத்தார், எந்த அதிகாரி ‘எனக்கு அதிகாரிகளின் மேல் நம்பிக்கை இல்லை, நீங்கள்தான் இதை சரியாக செய்வீர்கள்’ என்று எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார், சிக்னல் செயலியில் அனுப்பினார்களென்று. அதிகாரிகளின் பெயர்களை சொல்ல முடியாது.

ஆனால், ஒரு அதிகாரி என்னை இதுகுறித்து பேச வேண்டாம் என்றும், இதை சிலிண்டர் வெடித்த விபத்துதான் என்று தொடர்ந்து கூறுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார். நான் ஏற்கெனவே கூறியிருந்தேன், சில விஷயங்களை சொல்லமாட்டேன் என்று. 18-ம் தேதி வந்த மத்திய அரசின் எச்சரிக்கையை வைத்துக்கொண்டு 4 நாட்கள் ஏன் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு, யார் கையெழுத்திட்டு ஒப்புச்சப்பாணியாக அதை அனுப்பிவைத்தார்கள். அது இன்றுவரை கோவை ஆணையர் வரவே இல்லை என்று கூறுகிறார்.

எனவே, இதில் பல உயரதிகாரிகளின் பதவி போவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்த உயரதிகாரிகளுக்கு திமுகவின் அமைச்சர்கள் நிர்பந்தம் கொடுத்தார்களா என்பதையும் பார்க்க வேண்டும். கோவை காவல் ஆணையர் இரண்டு நாட்களாக வாயே திறக்கவில்லை. ஆனால், கோவையின் பொறுப்பு அமைச்சர் சொல்லி இதை சிலிண்டர் விபத்து என்றே கூறுங்கள் என்று சொன்னரா என்பதும் என்ஐஏ விசாரணையில் வரவேண்டும்.

காவல் துறையின் உயரதிகாரிகளில் நேர்மையான சில அதிகாரிகளின் கைகளை கட்டிப்போட்டுள்ளனர். இதனால், அமைச்சர் தேவையில்லாமல் வாயைத் திறக்கிறார். அந்த ஆவணங்களை வெளியிட்டால் மிகப் பெரிய பூதங்கள் இங்கு வெடிக்க ஆரம்பித்துவிடும். நான் சும்மா எதுவும் பேசவில்லை. இப்போதும் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் எனக்கு சம்மன் அனுப்புங்கள், தமிழக அரசிடமே வந்து அந்த ஆவணங்களை காட்டுகிறேன். ஆனால், உங்களிடம் ஆவணங்களை கொடுத்தபிறகு, பொதுவெளியில் வெளியிடுவோம். அப்போது பல தலைகள் உருளும்.

தமிழகத்தின் உள்துறை, சட்டம் - ஒழுங்கு யார் கையில் இருந்ததோ, அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு 4 நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக சட்டமன்றக் குழு அமைத்து, இதுதொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதையெல்லாம் ஒப்புக்கொண்டால் ஆதாரங்களை நான் கொடுக்கிறேன்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x