தேவர் குரு பூஜை | முதல்வர் சார்பில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள்: தமிழக அரசு தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை (அக்.30) நடைபெறவுள்ள தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் இ.பெரியசாமி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி, "தமிழக முதல்வருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால், நீண்ட பயணங்களைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, வரும் 30-10-2022 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் திருமகனாரின் 115-ஆவது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையில், தமிழக முதல்வரின் சார்பில், மூத்த அமைச்சர்களான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் இவ்விழாவில் நேரில் கலந்துகொண்டு, மரியாதை செலுத்துவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழா 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேவரின் குருபூஜை விழா 28-ம் தேதி லட்சார்ச்சனை பெருவிழாவுடன் தொடங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்தினர். அக்டோபர் 30 குருபூஜை அன்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணிகளில் தென்மண்டல ஐஜி தலைமையில் 10,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பை கண்காணிக்க முதன்முறையாக 14 உயர்தர ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in