கட்டுமான நிறுவன இயக்குநர், இன்ஜினீயர் கைது: 11 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் மொத்தம் 8 பேர் கைது

கட்டுமான நிறுவன இயக்குநர், இன்ஜினீயர் கைது: 11 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் மொத்தம் 8 பேர் கைது
Updated on
1 min read

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் தலைமறைவாக இருந்த கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், மற்றொரு இன்ஜினீயரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் ‘பிரைம் சிருஷ்டி' என்ற நிறுவனம் கட்டி வந்த 11 மாடி கட்டிடம் கடந்த 28-ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாங்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரான மதுரையைச் சேர்ந்த மனோகரன், அவரது மகன் முத்து காமாட்சி, கட்டிட வடிவமைப்பாளர் அடையாறு விஜய் பர்கோத்ரா, இன்ஜினீயர் வெங்கட சுப்பிரமணி, சைட் இன்ஜினீயர்கள் சங்கர் ராமகிருஷ்ணன், துரை சிங்கம் ஆகிய 6 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மனோகரன், சங்கர், துரைசிங்கம் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்த நிலையில் திங்கள்கிழமை அவர்கள் பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அன்றைய தினமே விஜய் பர்கோத்ரா, வெங்கட சுப்பிரமணி ஆகியோர் 5 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த பாலகுருசாமி (52), மற்றொரு சைட் இன்ஜினீயர் கடையநல்லூரை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரைம் சிருஷ்டி கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்களில் பாலகுருசாமியும் ஒருவர். இவர் பெயரில்தான் கட்டிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்த அன்று 'இடி தாக்கியதால்தான் கட்டிடம் இடிந்தது. இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்' என்று பேட்டி அளித்தார். பின்னர் தலைமறைவானார். இப்போது அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுமான நிறுவன இயக்குநர்களான மனோகரனும் பாலகுருசாமியும் உறவினர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in