தமிழக விவசாயிகளிடம் இருந்து 19% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

புதுப்பொலிவு பெற்றுள்ள நெல் கொள்முதல் நிலையம்.
புதுப்பொலிவு பெற்றுள்ள நெல் கொள்முதல் நிலையம்.
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 19 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மழை அதிகமாக இருப்பதால், விவசாயிகளிடம் இருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய உணவுத் துறைக்கு தமிழக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த அக். 10-ல் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய உணவுத் துறை, மத்திய தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தமிழகத்தில் ஆய்வு நடத்தினர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17-ல் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் சாதாரண, சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையையும் நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஈரப்பதம் 17 சதவீதமாக இருந்தால் சாதாரண ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,040, சன்ன ரகத்துக்கு ரூ.2,060 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் 17-18 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.2,019.60, சன்ன ரகத்துக்கு 2,039.40 என்றும், ஈரப்பதம்18-19 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.1,999.20, சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மாநில அரசின் ஊக்கத்தொகையாக சாதாரண ரகத்துக்கு ரூ.75, சன்ன ரகத்துக்கு ரூ.100 சேர்த்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. கடந்த செப். 1-ம் தேதி முதல் நேற்று வரை 1,500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1.05 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 7.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காகவிவசாயிகளுக்கு ரூ.1,398 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நிரந்தர கொள்முதல் நிலையங்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வருகின்றன. 2,400 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று பெறப்பட்டுள்ளது என்று உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in