

செந்தமிழ் அறக்கட்டளை சார் பில் ஜெயந்தன் படைப்பிலக் கிய விருதுகள் வழங்கும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பான ‘வால் நீண்ட கருங்குருவி’ என்ற நூலை திரைப்பட இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட்டார். ஜெயந்தனின் கட்டுரை தொகுப் பான ‘எண்ணம்’ என்ற நூலை, சர்க்கரைத் துறை ஆணையர் மகேசன் காசிராஜன் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரை ஆகிய பிரிவுகளில் எழுத்தாளர்கள் சூரிய தாஸ், பிருந்தா சாரதி, சொர்ணபாரதி, கலைவாணன் இ.எம்.எஸ்., ரமேஷ் ரக்சன், அ.ராமசாமி, குணா கந்தசாமி, அஜயன் பாலா, கார்ட்டூனிஸ்ட் பாலா ஆகியோருக்கு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளை நாகலட்சுமி ஜெயந்தன் வழங்கி கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினராக பங் கேற்ற எழுத்தாளர் ந.கந்தசாமி பேசும்போது, “ஜெயந்தன் எழுத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஜெயந்தனின் படைப்புகளை அவரது மனைவி, மகன், பேரப் பிள்ளைகள் என குடும்பமே கொண்டாடுகின்றனர். இந்த பேறு வேறு எந்த எழுத்தாளனுக்கும் இதுவரை கிடைக்கவில்லை. எழுத்தாளனின் சடலம், வெளியில் சென்றதும், அவனது படைப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதுதான் வரலாறு” என்றார்.
பின்னர் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “எழுத்தாளர் ஜெயந் தனின் படைப்புகளிலேயே சிறந்த படைப்பு, அவரது மகன் சீராளன்தான். இவர் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றி வரும் பணி மகத்தானது. தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆண்டு தோறும் அவரது தந்தை பெயரில் விருது வழங்கி, இலக்கியப் பணியாற்றி வருகிறார். இவரது பணி தொடர வேண்டும். நானும் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் ஹைக்கூ கவிதைகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கவும், சிறந்த ஹைக்கூ கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.
எழுத்தாளர் திருப்பூர் கிருஷ் ணன் பேசும்போது, “ஜெயந்த னின் கட்டுரைகளில் கோப முகம் வெளிப்படும். அவரது சிறுகதை களில் சாந்த முகம் வெளிப்படும். அவரது கட்டுரைகளில் கூறியுள்ள தலித் கருத்துகளை நான் வழி மொழிகிறேன்” என்றார்.
சர்க்கரைத்துறை ஆணையர் மகேசன் காசிராஜன் பேசும்போது, “ஜெயந்தனின் வரிகளை படிக்கும்போது, இயற்பியல் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவரது ஒவ்வொரு வரிகளும் மனிதனை சிந்திக்க வைக்கிறது” என்றார்.