

உடுமலை: உடுமலையில் மாவடப்பு, குழிமட்டி, குருமலை, மேல்குருமலை, பூச்சிக் கொட்டாம்பாறை, ஆட்டுமலை, பொருப்பாறு, ஈசல் திட்டு, திருமூர்த்திமலை, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு இக்கிராமங்கள் உள்ளதால், அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், தெருவிளக்கு, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை.
அவசர மருத்துவ உதவிக்கு உடுமலை நகர் அல்லது உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி, அமராவதி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையேஇக்கிராம மக்கள் அணுக வேண்டியுள்ளது. செங்குத்தாக உள்ள மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாது. இதனால், நோயால்பாதிக்கப்பட்டவர்களை தொட்டிலில் அமரவைத்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னாலம்மன் சோலை வரை சுமந்து செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். பின் அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியை மக்கள்பெற வேண்டியுள்ளது. எனவே மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்கென பிரத்யேகமாக அவசர மருத்துவ உதவி வாகனத்தை ஒதுக்க வேண்டுமென பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தளிஞ்சி மலைக்கிராம மக்கள் கூறியதாவது: சின்னாற்றில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் தளிஞ்சி கிராமம்உள்ளது. இதற்கு நடுவே ஆபத்தானகூட்டாற்றை கடந்துதான் மலைவாழ் மக்களோ, மருத்துவக் குழுவோ வரவேண்டிய நிலை உள்ளது. ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது, இப்பயணம் பேராபத்தில் முடியும்அபாயம் உள்ளது. எனவே கூட்டாற்றின் நடுவே உயர்மட்டப்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு மருத்துவ அவசர உதவி வாகன வசதியை ஏற்படுத்த வேண்டும். உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டி, அமராவதி நகர்ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (இன்று) ஆய்வு மேற்கொள்வதாக தெரிகிறது. எங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.