

கேரளாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த வாரம் 1,500 வாத்துகள் இறந்தன. அவற்றின் மாதிரிகளை சோதித்ததில், பறவைக் காய்ச்சலால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவிய பகுதி, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து தினமும் 1 கோடி முட்டைகள், கோழிகள் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்ணைகளுக்குவரும் வாகனங்களுக்கும், வெளியில் செல்லும்வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பண்ணையைச் சுற்றிலும் உள்ள குப்பை, கோழிக் கழிவு அகற்றப்பட்டு, பயோ செக்யூரிட்டி பாதுகாப்பு முறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பண்ணைகளுக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணை களுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.