

சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் சற்குணவதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அவற்றின் அடிப்படையில் ‘மலைவாழ் மக்கள் ஆய்வின் தேவையும், அவசியமும்’ என்ற தலைப்பிலான ஆய்வரங்கம் சேப்பாக்கத்தில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை பல்கலை. பதிவாளர் ச.ஏழுமலை பேசியதாவது: மலைக் கிராமங்களில் வசிக்கும்பழங்குடியின மக்களிடம் மருத்துவம், அறிவியல் உள்ளிட்டவை சார்ந்த பல்வேறு அரிய அம்சங்கள்புதைந்துள்ளன. குறிப்பாக, சத்தீஸ்கர், கர்நாடக மாநிலங்களில் உள்ள மலைக் கிராமங்களில் விஷக்கடி, குழந்தைப்பேறு போன்ற சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தும் மூலிகை மருந்துகள் சிறப்பானவை.
தற்போது, அங்குள்ள மக்களின்மருத்துவ முறைகளை அறிந்துகொள்ள மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, நாம் மலைவாழ் மக்களை உரிய முறையில் அணுகி, அவர்களிடம் புதைந்துள்ள அம்சங்களை அறிந்து கொண்டால், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதுடன், மருத்துவப் பலன்களையும் பெறமுடியும். அதேபோல, மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்துதர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர் சற்குணவதிபேசும்போது, "மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் உள்ள பூச்சிக்கொட்டாம் பாறை உள்ளிட்ட கிராமங்களில் முதுவர் இன பழங்குடிகள் வாழ்கின்றனர். தற்போது அந்தமக்களின் கல்விக்கான பணிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன்பலனாக தற்போது ஒருமாணவி பள்ளிப் படிப்பை முடித்து,உயர்கல்வி சென்றுள்ளார். இதுதவிர 17 குழந்தைகள் பள்ளிகளில் படித்துவருகின்றனர். இன்றைய ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோர், மலைவாழ் மக்கள் வாழ்வியல் சார்ந்த பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்து, அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிசெய்ய வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் சீ.சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் வே.ஜெய, பேராசிரியர்கள் எஸ்.அரவிந்தன், இரா.பாஞ்சாலன், மா.தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.