

ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் நினைவாலயத்துக்கு மரியாதை செலுத்த வந்த அதிமுகவினர் `எடப்பாடியார் வாழ்க' என முழக்கமிட்டதால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அங்கு கூடியிருந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா தொடங்கியது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்பி நிறைகுளத்தான், கமுதி ஒன்றியச் செயலாளர் காளிமுத்து உள்ளிட்டோர் தொண்டர்களுடன் தேவர் நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.
அப்போது அதிமுகவினர் `எடப் பாடியார் வாழ்க', `பசும்பொன்னார்' வாழ்க என முழக்கம் எழுப்பினர். அங்கு அஞ்சலி செலுத்த வந்த தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் சிலர் `எடப்பாடியார் வாழ்க' என முழக்கமிடக் கூடாது, உடனடியாக தேவர் நினைவாலயத்தைவிட்டு முன்னாள் அமைச்சர் வெளியேற வேண்டும் என எதிர்ப்பு தெரி வித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு மரியாதை செலுத்தக் கூடியிருந்தோரும் அமைச்சருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அங்கு வந்த போலீஸார் இருதரப்பையும் விலக்கி அனுப்பி வைத்தனர்.