

அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்கக் கூடிய போராட்டத்தையும், மக்களின் உணர்வையும் மோடி உணர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து இன்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளன. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இடதுசாரிகள் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், ''நவம்பர் 8-ம் தேதி இரவு மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். ஆனால், அன்றைய நாள் முற்பகலில் கொல்கத்தாவில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ரூ.3 கோடி 1000ரூபாய் நோட்டுகளாக டெபாசிட் செய்தனர். பிஹாரில் பாஜகவைச் சார்ந்தவர் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து சொத்துகள் வாங்கியதாக செய்திகள் வந்துள்ளன. சேலத்தில் பாஜகவைச் சார்ந்தவர் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தது கைப்பற்றப்பட்டது.
ஒட்டுமொத்தமாக மோடியின் அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்கவோ அல்லது கள்ள நோட்டை ஒழிக்கவோ பயன்படாது. தீவிரவாதிகளை ஒடுக்கப் பயன்பாடாது. மாறாக ஏழை நடுத்தர மக்கள் மீது மோடி கடுமையாக தாக்குதல் தொடுத்திருக்கிறார்'' என்றார்.
முத்தரசன் பேசுகையில், ''அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்கக் கூடிய இந்தப் போராட்டத்தையும், மக்களின் உணர்வையும் மோடி உணர வேண்டும். மோடி உணரவில்லையென்றால் இந்திய மக்கள் உணர்த்த வேண்டிய முறையில் நிச்சயம் உணர்த்துவார்கள்'' என்றார்.