Published : 04 Nov 2016 08:30 AM
Last Updated : 04 Nov 2016 08:30 AM

செயற்கை சுவாச கருவிகள் அகற்றம்: இன்னும் 10 நாட்களில் முதல்வர் பூரண குணமடைந்து விடுவார் - மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் 10 நாட்களில் பூரண குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரின் ஆலோச னையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த மருத்துவர் கள் குழு, முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. நேற்று 43-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களுடன் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத் துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:

மருத்துவர்கள் தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சையால் முதல்வருக்கு நுரையீரல் நோய்த் தொற்று குணமாகியுள்ளது. இயற்கையாக சுவாசிக்க முடியாத காரணத்தால் முதல்வருக்கு தொண்டையில் துளையிட்டு கருவிகள் பொருத்தி, அதன்மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் இயற்கையாக சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இதனால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டுள்ளன. செயற்கை சுவாசத்துக்காக பொருத்தப்பட்ட ஒரு டியூப் மட்டுமே தொண்டைப் பகுதியில் இருக்கிறது.

இன்னும் 10 நாட்களில் முதல் வர் பூரணமாக குணமடைந்து விடுவார். அதன் பின்பு 2 முதல் 3 வாரங்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். அதன் பிறகே முதல்வர் மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்புவார். தற்போது தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் இருக்கும் முதல்வரை வேறு வார்டுக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x