மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாத திருப்பரங்குன்றம் தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்

மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாத திருப்பரங்குன்றம் தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்
Updated on
2 min read

மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாத திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் இம்மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 3 தொகுதி தேர்தல்களில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, மூன்று தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவற்றை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், 3 தொகுதிகளிலும் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறிவிட்டார். இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ஏதேதோ கூறி சமாளிக்கப் பார்த்தாரே தவிர, திருப்தியளிக்கும் வகையில் விளக்கமளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில், இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் பேசிக் கொள்ளுமாறு கூறி ராஜேஷ் லக்கானி ஒதுங்கிக் கொண்டார்.

பாமக புதுவை மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு ஆணையின் பத்தாவது பத்தியின்படி, ஓர் அரசியல் கட்சி ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், பிற மாநிலங்களில் அக்கட்சி போட்டியிடும்போதும் அதற்குரிய சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் 3 தொகுதி தேர்தலுக்கும் பாமகவுக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு சின்னம் ஒதுக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட நிலையில், பொதுத் தேர்தலுக்கு பொறுப்பு வகிக்கும் தேர்தல் ஆணைய சார்பு செயலாளர் பிரமோத் குமார் சர்மா தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். ஆனால், இடைத்தேர்தல்களுக்கு பொறுப்பு வகிக்கும் சார்பு செயலாளர் அஷ்விணி குமார் மொகல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க மறுத்து விட்டார்.

3 தொகுதி இடைத்தேர்தல்களில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் அதிகாரிகளிடம் ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 3 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது. அனைத்துத் தேர்தலுக்கும் ஒரே விதிமுறைகள் தான் எனும் போது இரு தொகுதிகளுக்கு சின்னம் ஒதுக்கிவிட்டு, ஒரு தொகுதிக்கு மட்டும் மறுப்பது எந்த வகையான நியாயம்? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். ஆனால், ஆணையத்தின் செயல்பாடுகள் அப்படி இல்லாமல் ஒரு சார்பு கொண்டதாக அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானதாகும்.தேர்தல் ஆணையம், பாமகவுக்கு சின்னம் ஒதுக்குவதில் மட்டும் தேவையற்ற கடுமை காட்டுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பணத்தை வெள்ளமாக பாயவிட்டன. அதற்காக அந்த கட்சிகளை தடை செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று கூறி தேர்தலை ஒத்தி வைத்த ஆணையம், அங்கு இயல்பாப சூழல் திரும்புவதற்கு முன்பாகவே தேர்தலை நடத்துகிறது.

தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அதிமுகவும், திமுகவும் தெரிவிக்காதது குறித்து மே 15ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இரு கட்சிகளுக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அந்த கெடுவுக்குள் திமுக விளக்கம் அளிக்கவில்லை; அதிமுகவோ வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதியை திரட்டும் வழிமுறைகள் தேர்தல் அறிக்கையில் இருப்பதாக ஒற்றை வரியில் பதிலளித்திருந்தது. இதற்காக தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையே ஆணையம் நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இரு கட்சிகளுக்கும் வலிக்காமல் எச்சரிக்கை விடுத்து ஒதுங்கிக் கொண்டது.

ஆனால், பாமக விஷயத்தில் மட்டும் ஜனநாயகத்திற்கு எதிரான வகையில் ஆணையம் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆணையத்தின் ஒருதரப்பான செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மாம்பழம் சின்னம் ஒதுக்கப்படாத திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் போட்டியிடுவர்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in