

வங்கக் கடலில் மையம் கொண் டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி செல்வதால், அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை, 10 நாட்கள் தாமதமாக கடந்த அக்டோபர் 30-ம் தேதி தொடங் கியது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன், சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தற்போது வலுப்பெற்று, திசை மாறி வடகிழக்கு திசையில் நகர்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ராமேஸ்வரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். காற் றழுத்த தாழ்வு மண்டலமானது, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து விலகிச் செல்வ தால், வரும் 6-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை, 4 நாட் களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை குறைந்த சூழ்நிலை நிலவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப் படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ., திண்டுக்கல் 4 செ.மீ., நத்தம் 3 செ.மீ., தாளவாடி, பேச்சிப்பாறை, அரவக்குறிச்சி, அவினாசி, நீலகிரி, வேதாரண்யம், சென்னை ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ., பெருந்துறை, வேடசந்தூர், காமாட்சிபுரம், கோபிசெட்டிப் பாளையம், நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
3-ம் எண் புயல் எச்சரிக்கை
சென்னை, நாகப்பட்டினம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. இது பொதுமக்களுக் கான அறிவிப்பு இல்லை. இதற்காக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இது கடலில் பயணிக்கும் கப்பல்களுக்காக விடுக்கப்படும் எச்சரிக்கை. முன்பு தகவல் தொழில்நுட்பம் மேம்படாத நிலையில் இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டது. இப்போது தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், பாரம்பரிய நடைமுறையை தொடர்வதற்காக புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.