Published : 08 Jul 2014 11:16 AM
Last Updated : 08 Jul 2014 11:16 AM

பொறியியல் படிப்பு பொது கவுன்சலிங் தொடங்கியது: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்துக்கு மவுசு

பொறியியல் படிப்புக்கான பொது கவுன்சலிங், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை மாணவ, மாணவிகள் போட்டி போட்டு தேர்வு செய்தனர்.

தமிழகத்தில் 534 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 10 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் முடிவடைந்த நிலையில், பொது கவுன்சலிங் (அகடமிக்), சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

பொறியியல் படிப்பில் 271 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். அவர்களில் 107 பேர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துவிட்டதால் தரவரிசைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி மாணவ, மாணவிகள் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டனர்.

கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை

முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி ஹரிதா, 2-ம் இடம் பெற்ற திருப்பூர் மாணவர் பிரபு இருவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், 3-ம் இடத்தைப் பிடித்த கோவை மாணவர் ரவிசங்கர் கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (இ.சி.இ.) பாடப் பிரிவையும் தேர்வு செய்தனர்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 5 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும், 3 பேர் இ.சி.இ., 2 பேர் மெக்கானிக்கல் பாடத்தையும் தேர்வு செய்தனர். அவர்கள் அனைவருக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மூ.ராஜாராம், பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல் நாள் கவுன்சலிங்கில் பங்கேற்ற பெரும்பாலான மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் அதற்கு அடுத்தபடியாக இ.சி.இ., மெக்கானிக்கல் பிரிவுகளையும் தேர்வு செய்ததாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவுன்சலிங்கின் முதல்நாளில் 2,350 பேர் அழைக்கப்பட் டிருந்தனர். 2-வது நாளில் 4 ஆயிரம் பேரும் அதைத் தொடர்ந்து தினமும் 5,500 பேரும் கவுன்சலிங்குக்கு அழைக்கப் பட்டிருப்பதாக பேராசிரியர் ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

2-வது கட்ட கவுன்சலிங் எப்போது?

முதல்கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 4-ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர வசதியாக 2-வது கட்ட கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம்.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் கூறுகையில், ‘‘முதல்கட்ட கவுன்சலிங்கில் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் 2-வது கட்ட கவுன்சலிங் தேதி முடிவு செய்யப்படும். இடங்கள் குறைவாக இருந்து, குறைவான விண்ணப்பங்களும் வரும்பட்சத்தில் 2-வது கட்ட கவுன்சலிங்கை ஒரு நாளிலோ அல்லது இரண்டு மூன்று நாளிலோ நடத்திவிட முடியும். முதல்கட்ட கவுன்சலிங் முடிவடைந்து அரசின் அனுமதி கிடைத்ததும் 2-வது கட்ட கவுன்சலிங் தேதி முடிவு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x