அம்மா உணவகத்தில் ஊழல் நடப்பதாக திமுக கவுன்சிலர் புகார்: ஆதாரம் கேட்கும் மேயர் பிரியா

மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா
மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா
Updated on
1 min read

சென்னை: “அம்மா உணவகத்தில் பெரிய தவறு நடந்திருந்தால், அது தொடர்பான ஆதாரத்துடன் என்னிடமே தெரிவிக்கலாம்” என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று (அக்.28) நடைபெற்றது. இதில் கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லாத நேரத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 152-வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாரதி பேசுகையில், ‘‘சென்னையில் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கும் பணியை தனியார் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செய்து வருகிறது. குறுகிய சாலையிலும் நடைபாதை வியாபாரிகள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, கவுன்சிலர்களுடன் ஆலோசித்து, நடைபாதை வியபாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னை மாநகராட்சியில் நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கை சரியான முறையில் கணக்கெடுக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கையை அதிகாரிகள் வாயிலாக கவுன்சிலர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும்" என்றார்.

138-வது திமுக கவுன்சிலர் கண்ணன் பேசுகையில், "அம்மா உணவக ஊழியர்கள் வருகை பதிவேடுகளை முறையாக பராமரிக்கபடுவதில்லை. 12 மணி நேரம் ஆகியும் சில ஊழியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடாமால் காலியாகவே வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயனாளிகளுக்கு வழங்கப்படும் டோக்கன்களை அவர்களே வங்குவதால், 100 டோக்கன்களுக்கு பின், மீண்டும் அதே டோக்கன்களை பயன்படுத்தி ஊழல் செய்கின்றனர்.

அதேபோல் அரிசி, பருப்புகளை கையிருப்பு ஏட்டில் குறிப்பிடுவது ஒன்றாகவும் பயன்படுத்துவது ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக, ஐந்து கிலோ அரிசி, பருப்பு என எழுதிவிட்டு இரண்டு முதல் மூன்று கிலோ மட்டுமே பயன்படுத்துகின்றனர். மீதியை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்க எடுக்க அதிகாரம் இல்லை என்கின்றனர்" என்று அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்து மாநகராட்சி மேயர் பிரியா, "அம்மா உணவங்களுக்கு மாநகராட்சியே டோக்கன் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அம்மா உணவக ஊழியர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மண்டல அலுவலரிடம் புகார் அளிக்கலாம். மேலும், பெரிய தவறாக இருந்தால் அதற்குரிய ஆதாரமிருந்தால் என்னிடமோ, கமிஷனரிடமோ தெரிவிக்கலாம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in