அரசு தரப்பின் கால அவகாச கோரிக்கை ஏற்பு: கோடநாடு வழக்கு டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை நீதிமன்றத்தில் ஆஜரான சிபிசிஐடி போலீஸார். படம்:ஆர்.டி.சிவசங்கர்.
உதகை நீதிமன்றத்தில் ஆஜரான சிபிசிஐடி போலீஸார். படம்:ஆர்.டி.சிவசங்கர்.
Updated on
1 min read

உதகை: சிபிசிஐடி போலீஸார் மற்ற விசாரணை மேற்கொள்ளவுள்ளதால் அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரியதால் கோடநாடு வழக்கு விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கோடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதன்படி மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடந்தது.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை நேற்று மாவட்ட நீதிபதி பி. முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையாறு மனோஜ், ஆகிய இருவர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால் கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையில் டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சந்திரசேகர், ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறியதாவது: "கோடநாடு கொலை வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் புலன் விசாரணையை தொடங்கி உள்ளனர். எனவே வழக்கு விசாரணையை மேற்கொள்ள காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.

இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் எதிரிகள் தரப்பில் விசாரணை தொடர்பான நகல்களை கேட்டனர். தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் தற்போதைக்கு வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று வழக்கறிஞர் ஷாஜகான் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in