

கோவையில் தற்போது 3,000 போலீஸார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், அதிவிரைவுப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு நேற்று பிற்பகல் கோவைக்கு வந்தார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய போலீஸாருக்குப் பாராட்டுச் சான்றிதழ், வெகுமதி வழங்கினார். தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் டிஜிபி சைலேந்திர பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்ஐஏ-வுக்கு மாற்ற முதல்வர் பரிந்துரைத்தார். அதன்படி, மத்திய உள்துறைச் செயலகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க உத்தரவிட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே, தொடர்ந்து இவ்வழக்கை என்ஐஏ விசாரிக்கும். இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல் துறையினரிடம் இருந்த ஆவணங்கள் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் காவல் துறை வழங்கும்" என்றார்.