

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், காவல்துறையினர் துரித விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டம் முடிந்த பின்னர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். 1998-ம் ஆண்டு நடந்த சம்பவம் போன்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. எனவே, தற்போது நடந்துள்ள கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காவல்துறையினர் துரித விசாரணை நடத்தி மிகச் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னரே கோவையில் நடந்த சம்பவத்தால், கோவையின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போதுதான் அது சரியாகி வருகிறது.
தமிழக உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே செய்கிறார்கள். கோவையில் நடந்த சம்பவத்துக்கு ஜமாத் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளனர். எனவே யார் தவறு செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். கோவை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். எனவே, இனியாவது விழித்துக்கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.