

கோவை: கோவையில் வரும் 31ம் தேதி நடைபெறுவதாக பாஜக அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என, அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி.செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் திமுக கோவை மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தொ.அ.ரவி (கோவை வடக்கு), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), மேயர் கல்பனா, காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 23-ம் தேதி கோவையில் விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடந்தது. உடனடியாக மாநில அரசு தலையிட்டு காவல்துறை உயரதிகாரிகளை கோவைக்கு அனுப்பி வைத்து, நடவடிக்கை எடுத்ததை இக்கூட்டம் வரவேற்கிறது.
காவல்துறையின் உளவு நடவடிக்கைகள் தொடர்பான விமர்சனங்களை இக்கூட்டம் நிராகரிக்கிறது. உயிரிழந்த நபர் என்.ஐ.ஏவின் கட்டுப்பாட்டில் இருந்தவர். எனவே, இது என்.ஐ.ஏவின் தோல்வி என தொடர்புடைய நபர்கள் சொல்வார்களா?
தமிழக முதல்வர் கோவையில் 3 இடங்களில் உடனடியாக காவல் நிலையங்களை திறக்க உத்தரவிட்டதையும், உளவுத்துறையை நவீனப்படுத்துவதற்கான உதவிகளை செய்வதையும், கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை என்.ஐ.ஏவின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதையும் இக்கூட்டம் வரவேற்கிறது.
மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்தவும், மாவட்ட மக்களின் மத்தியில் பாதுகாப்பான தன்மையை உருவாக்கவும், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் இக்கூட்டம் வரவேற்கிறது. இந்நேரத்தில், பதற்றத்தை உருவாக்கும் உள்நோக்கத்தோடு வரும் 31-ம் தேதி மாநகரில் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்துகிறோம் என பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. அதை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கோவை மாவட்டத்தின் அமைதியை பாதுகாப்பதில் அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கே.பாலகிருஷ்ணன் கருத்து: கோவையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உயிரிழந்த ஜமேஷா முபின் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் என்ஐஏ விசாரணை வளையத்துக்குள் ஏற்கெனவே இருந்தவர்கள். என்ஐஏவால்கூட இந்த தீவிரவாத நடவடிக்கைகளை ஏன் கண்டறிய முடியவில்லை. அவர்களின் கண்காணிப்பிலும் குறை இருந்துள்ளதை என்ஐஏ ஒத்துக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் என்ஐஏ, மாநில அரசின் உளவுத்துறைக்கு எந்த தகவலும் தெரியவில்லை எனும்போது, அங்குள்ள குறைபாடுகளை களைந்தால்தான் தமிழகத்தில் இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.
தற்போதைய சூழலில் பாஜக சார்பில் வரும் 31-ம் தேதி கோவை மாநகரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசியம் என்ன இருக்கிறது? பதற்றமான சூழலில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற நோக்கத்தோடு பந்த் அறிவித்திருப்பது அவசிய மற்றது.
அமைதியை பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.