Published : 28 Oct 2022 06:59 AM
Last Updated : 28 Oct 2022 06:59 AM

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம்; மருத்துவ மையத்துக்கு நோட்டீஸ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விவகாரத்தில் முறையான தகவல் அளிக்காத காரணத்தாலும், ஆவணங்களை முறையாக பராமரிக்காததாலும் மருத்துவ மையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ‘நட்புடன் உங்களோடு - மனநல சேவை’ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் ‘நட்புடன் உங்களோடு - மனநல சேவை’ என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 14416 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இதில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு மனநல மருத்துவ சேவைகள் வழங்கப்படும். தற்போது, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் மனநலன் காக்கும் ‘மனநல நல்லாதரவு மன்றங்கள்’ தொடங்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மனநல ஆலோசனைகள் வழங்க, 104 சேவை மையம் தொடங்கப்பட்டது. இதில் 2021-ம் ஆண்டு 1,10,971 மாணவர்களும், 2020-ம் ஆண்டு 1,45,988 மாணவர்களும் ஆலோசனை பெற்றுள்ளனர்.

நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதில் எந்த விதிமீறல்களும் இல்லை. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் முறையான ஆவணங்களையும் மருத்துவ குழு மேற்கொண்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கவில்லை. ஆவணங்களையும் முறையாக பராமரிக்கவில்லை. அதேபோல், மருத்துவமனை விசாரணை குழுவுக்கு முழு ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. இவைதான் தற்போது விதிமீறலாக உள்ளது. எனவே, முறையான தகவல் அளிக்காத காரணத்தால் மருத்துவ மையத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் விவகாரத்தில் வெளிநாடு சென்றுள்ள மருத்துவரை விசாரிக்கும் பணி தொடரும். தற்போது வாடகைத் தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சட்டத்தின்படி வாடகைத் தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமேதான் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x