Published : 28 Oct 2022 07:34 AM
Last Updated : 28 Oct 2022 07:34 AM
தாம்பரம்/காஞ்சி/திருவள்ளூர்: திமுக அரசு தமிழ்மொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தாம்பரம், காஞ்சி, திருவள்ளூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாம்பரம் சண்முக சாலையில் செங்கை மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் தலைமையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து கைகளில் பதாகை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், ‘மத்திய கல்விக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டாம்’ போன்ற கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் திமுக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். இதில் வேதசுப்பிரமணியம் பேசியபோது, “தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்காக நமது தலைவர் அண்ணாமலை பாடுபட்டு வருகிறார். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமை தாங்கினார். பாஜக மாநிலச் செயலர் மீனாட்சி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசின் நல திட்டங்களுக்கான பிரிவு மாநில தலைவர் லோகநாதன், மாவட்ட தலைவர் அஷ்வின் என்ற ராஜசிம்ம மகேந்திரா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், சீனிவாசன், பொருளாளர் மதுசூதனன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். அதே போல், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, மாவட்ட தலைவர் சரவணன் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT