Published : 28 Oct 2022 04:40 AM
Last Updated : 28 Oct 2022 04:40 AM
சிவகங்கை: குடிநீர் இணைப்பு தர ரூ.300 லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சித் தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி மேல மாகாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் கடந்த 2002-ம் ஆண்டு தன்னுடைய வீட்டில் குடிநீர் இணைப்பு பெற, அப்போது ஊராட்சித் தலைவராக இருந்த ராணி ஆரோனை அணுகினார். அப்போது ஊராட்சித் தலைவர் ரூ.300 லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து கணபதி சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் செய்தார். அவர்களது அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ஊராட்சித் தலைவரிடம் கணபதி கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராணி ஆரோனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி இன்பகார்த்திக், குற்றம் சாட்டப்பட்ட ராணி ஆரோனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் புகார்தாரரான கணபதி மற்றும் சாட்சி கூறிய ராமசாமி ஆகிய 2 பேரும் விசாரணையின்போது பிறழ் சாட்சிகளாக மாறினர். அவர்கள் 2 பேர் மீதும் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT