Published : 29 Nov 2016 01:02 PM
Last Updated : 29 Nov 2016 01:02 PM

பல்கலை. பணி நியமனங்கள் மீது உயர்மட்ட விசாரணை: ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணி நியமனங்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு திமுக பொருளாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் நியமனங்களில் அதிமுக ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகள் அனைத்தும் அதிர்ச்சியளிக்கிறது.

மாணவர்களுக்கு உயர் கல்வி அளிப்பதில் மிக முக்கிய அங்கமாகத் திகழும் பல்கலைக்கழகங்களில் அச்சமின்றி நடைபெறும் இந்த முறைகேடுகள் உயர் கல்வியின் சிறப்பையும், தரத்தையும் முற்றிலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது அதைவிட வேதனையாக இருக்கிறது. புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றிற்கு கூட துணை வேந்தர்கள் நியமிக்கப்படாதது அதிமுக அரசுக்கு உயர்கல்வி பற்றிய அக்கறையே இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

உலக அரங்கில் தமிழக மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் உயர் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் 'உயர் கல்வியின் தரத்தை உறுதி செய்யும் தலைவர்களாக' கருதப்படும் துணை வேந்தர் பதவி நியமனங்களில் அதிமுக ஆட்சியில் வெளிப்படைத் தன்மை என்பது மருந்துக்குக் கூட தென்படுவதில்லை என்பது கவலையளிக்கிறது.

பல்கலை மாணவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டிய பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பதவிகளுக்கான நியமனங்களில் யூ.ஜி.சி விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதிமுக ஆட்சியின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களோ, பதிவாளர்களோ யு.ஜி.சி. விதிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் போக்குதான் இருக்கிறது என்பது பகிரங்கமாகவே வெளிவந்திருக்கிறது.

இன்று 'தி இந்து' ஆங்கில நாளிதழில் Governor’s intervention forced law university to put off recruitment என்று முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் உதவிப் பேராசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யு.ஜி.சி விதிகளை தூக்கியெறிந்து விட்டு இந்த தேர்வுகள் நடைபெற்றுள்ளதாக பல்வேறு புகார்கள் மாண்புமிகு ஆளுனருக்கே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. வருகின்ற டிசம்பர் 10-ம் தேதியுடன் பதவிக்காலம் முடியும் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் வணங்காமுடி "என் பதவிக்காலம் முடியும் நேரத்தில் குற்றச்சாட்டிற்கு ஆளாக விரும்பவில்லை. ஆகவே இந்த நியமனத்தை தள்ளி வைத்திருக்கிறேன்" என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் பற்றி இன்று வேறொரு நாளேட்டில் வெளிவந்துள்ள செய்தியில், "கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் உள்பட 80 பணியிடங்களுக்கான நியமனம் நடைபெற்றது. பேராசிரியர்களை நியமிப்பதில் ரூ. 40 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும், பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே நியமனத்துக்கான பட்டியலில் சிபாரிசு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது என புகார் கூறப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்த அந்த பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன், "இந்தப் பிரச்சினையில் என்னை சிக்கவைத்து விட்டனர்" என்று பேட்டி கொடுத்து, அதுவும் நாளிதழில் வெளிவந்திருக்கிறது.

பத்து மாதமாக துணைவேந்தர் இல்லாமல் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் சீர்குலைந்து நிற்கிறது. படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தக் கூட அங்கு துணை வேந்தர் இல்லை. துணை வேந்தர் இல்லாமலேயே பட்டமளிப்பு விழாவை நடத்தி, டிகிரி சர்டிபிகேட்டுகளில் உயர்கல்வித்துறை செயலாளர் கையெழுத்துப் போடும் புதிய மரபை அதிமுக அரசு புகுத்துகிறது என்று ஆளுனருக்கு புகார் அனுப்பப்பட்டு, அந்த செய்தியும் இன்று ஒரு ஆங்கில நாளிதழில் விரிவாக வெளிவந்திருக்கிறது.

இப்படி எந்த பத்திரிக்கையைப் புரட்டினாலும், பல்கலைக்கழகங்களில் நடக்கும் நிர்வாக குளறுபடிகள், முறைகேடுகள், ஊழல்கள் என்றுதான் செய்திகளைப் படிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல்கலைகழகங்களின் நிர்வாகம் அடியோடு சீரழிந்து நிற்கிறது என கல்வியாளர்கள் அனைவரும் கவலைப்படுகிறார்கள்.

உலக அளவில் அங்கீகாரம் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்திற்கும், சென்னை பல்கலைக் கழகத்திற்கும் துணைவேந்தரே நியமிக்கப்படாமல் இருப்பது அதிமுக அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது. அண்ணாப் பல்கலைக்கழக்ததிற்கு துணை வேந்தரை நியமிக்கும் 'சர்ச் கமிட்டி'க்கு உறுப்பினர்களை நியமிப்பதிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முரண்பாடுகள் நிகழ்ந்திருப்பது துணை வேந்தர் நியமனத்தில் அதிமுக அரசு 'வெளிப்படைத் தன்மையை' கம்பளத்திற்கு அடியில் போட்டு மறைத்து விட்டது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அது மட்டுமின்றி அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறையின் நிர்வாகச் சீர்கேட்டைப் பார்த்து கல்வியாளர்கள், பேராசிரியர்கள் அனைவருமே வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இது போன்றதொரு மோசமான நிர்வாகத்தை அனுமதிப்பது உயர்கல்வியின் தரத்தை உயர்த்த எந்த விதத்திலும் பயன்படாது.

ஆகவே ஆளுனர், 'பல்கலைக்கழக வேந்தர்' என்ற முறையில் உடனடியாக தமிழகத்தில் உள்ள சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை பல்கலைக் கழகம், அண்ணாப் பல்கலைக்கழகம் ஆகிய பிரசித்தி பெற்ற பல்கலைக்கழங்களுக்கு உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம், ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய அனைத்திலும் நடைபெற்ற பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் நியமனங்கள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x