Published : 28 Oct 2022 04:45 AM
Last Updated : 28 Oct 2022 04:45 AM

வீடு, வணிக கட்டிடங்களுக்கான பாதாளச் சாக்கடை இணைப்புக்கான வைப்புத்தொகை உயர்வு: ஈரோடு மக்கள் அதிருப்தி

ஈரோடு வஉசி பூங்கா பின்புறம் உள்ள பவானி சாலையில், பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, சாலையெங்கும் கழிவுநீர் பரவி தூர்நாற்றம் வீசி வருகிறது.

ஈரோடு: பாதாளச் சாக்கடை இணைப்புக் கான வைப்புத்தொகை மற்றும் மாதாந்திர கட்டணத்தை ஈரோடு மாநகராட்சி உயர்த்தியுள்ளதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சியில் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டம் தற்போது வரை முழுமையாக முடிவுக்கு வராதநிலை தொடர்கிறது. இதனிடையே பாதாளச்சாக்கடை இணைப்புக்கான வைப்புத்தொகை, மாதாந்திர கட்டணத்தை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வீடுகளுக்கு உயர்வு எவ்வளவு?: 500 சதுர அடிக்குள் கட்டிட பரப்பளவு உள்ள வீட்டு இணைப்புக்கு வைப்புத்தொகை ரூ.7,500 (ரூ.5,000 -பழைய கட்டணம்), மாதாந்திர கட்டணம் 100 ஆகவும் (ரூ.70 பழையது) உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 1,200 சதுர அடி வரையிலான இணைப்புக்கு வைப்புத்தொகை ரூ.10 ஆயிரமாகவும், மாதாந்திர கட்டணம் ரூ 100-ல் இருந்து ரூ.140-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

1,201 முதல் 2,400 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு வைப்புத்தொகை ரூ.12 ஆயிரத்து 500, மாதாந்திர கட்டணம் ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2,401 சதுர அடிக்கு மேல் வைப்பு கட்டணம் ரூ.15 ஆயிரம், மாதாந்திர கட்டணம் ரூ.220 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல, 500 சதுர அடிக்குள்ளான தொழிற்சாலைகள் மற்றும் வணிக உபயோகத்துக்கான கட்டிடங்களுக்கு வைப்புத்தொகை ரூ.15 ஆயிரம், மாதாந்திர கட்டணம் ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

501 சதுர அடி முதல் 1,200 சதுர அடி வரை வைப்புத்தொகை ரூ.20 ஆயிரம், மாதாந்திர கட்டணம் ரூ.420 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,201 முதல், 2,400 சதுர அடி வரையில் வைப்புத்தொகை ரூ.25 ஆயிரமும், மாதாந்திர கட்டணமாக ரூ.540-ம், 2,400 சதுர அடிக்கு மேல் வைப்புத்தொகையாக ரூ.30 ஆயிரமும், மாதாந்திர கட்டணமாக ரூ.660-ம் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

நோட்டீஸ் விநியோகம்: மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், பணிகள் முடிந்த பகுதிகளில், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென, பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த சரவணன் கூறியதாவது: மாநகராட்சியில் மேற்கொள்ளப் பட்ட பாதாளச்சாக்கடைப் பணிகள் தரமாக நடைபெறவில்லை. பல வீடுகள், தொழிற்சாலைகளில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார் செய்தால், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.

நகரின் பல இடங்களில், அடிக்கடி பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சாலையெங்கும் கழிவுநீர் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், 500 சதுர அடிக்கு உட்பட்ட வீடுகளுக்கு கூட கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது, என்றார். மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், பணிகள் முடிந்த பகுதிகளில், இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x