சமரசமற்ற போராளி காஸ்ட்ரோ: ஸ்டாலின் புகழஞ்சலி

சமரசமற்ற போராளி காஸ்ட்ரோ: ஸ்டாலின் புகழஞ்சலி
Updated on
1 min read

கியூபாவை கல்வி – மருத்துவம் - பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்திய சமரசமற்ற போராளியாக காஸ்ட்ரோ விளங்கினார் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கியூபாவின் விடுதலைக்கு புரட்சியின் வாயிலாக வித்திட்டவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மரணச் செய்தி, விடுதலை உணர்வு கொண்ட அனைத்து இனத்திற்கும் பேரிழப்பாகும்.

வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று கியூபாவை கல்வி – மருத்துவம் - பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்திய சமரசமற்ற போராளியாக காஸ்ட்ரோ விளங்கினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் இதயங்கவர்ந்த இருபதாம் நூற்றாண்டு தலைவர்களில் காஸ்ட்ரோவுக்கு முக்கிய இடம் உண்டு. தான் சந்திக்க விரும்பும் தலைவர் என்று ஃபிடல் காஸ்ட்ரோ பெயரைக் குறிப்பிட்டு தலைவர் கருணாநிதி ஒருமுறை பேட்டி அளித்து இருப்பதுடன், காஸ்ட்ரோ பற்றிய அவரது கவிதையும் உணர்ச்சிப்பூர்வமானதாகும்.

உலகில் அதிக முறை கொலை முயற்சிகளுக்கு ஆளாகியும், தன்னைத் தற்காத்துக் கொண்டு, தாய்நாட்டை மீட்ட மாபெரும் தலைவரான மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எனது வீரவணக்கம்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in