

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலச் செயலா ளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாத புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள தமிழக அரசின் சிப்காட் இயக்குநரகம் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் 4 மாவட்டங் களின் குடிநீர் ஆதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் உதய் மின் திட்டம், மருத்துவப் படிப்புக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு (நீட்), புதிய கல்விக் கொள்கை, உணவுப் பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றால் தமிழகத்துக்கு பாதிப்பு வரும் என முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள நிலையில், சில திட்டங்களுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் முதல்வரின் உடல்நிலையைப் பயன்படுத்தி தமிழக அரசின் செயல்பாட்டில் மத்திய அரசு செல்வாக்கு செலுத்தி வருவதாகக் கருத இடமளித்துள்ளது. எனவே, முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங் கள், சட்டங்கள் தொடர்பாக தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியில் 17 சதவீதத்தை மத்திய பாஜக அரசு குறைத்துள்ளது. வேலை நாட்களை 150 ஆக அதிகரித்து கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி கிராமத்தில் நடக்கும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மூத்த தலைவர்கள் இரா.நல்லகண்ணு, தா.பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.