

திருச்சி: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் நேற்று தெரிவித்தது:
தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக அக்.12-ம் தேதி கடிதம் வாயிலாக புதிய உத்தரவை அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு விவசாயி எந்த பகுதிகளில் சாகுபடி செய்கிறாரோ அந்த பகுதியில் உள்ள வங்கி களில் உறுப்பினராகி, அந்த நில சாகுபடிக்கான ஆவணங்களைக் கொடுத்து கடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏற்கெனவே ஒரு விவசாயி தனக்கு நிலம் எங்கு இருந்தாலும் தான் குடியிருக்கும் பகுதிக்கு அருகே உள்ள கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகி, அங்கு கடன் பெற்று சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் புதிய உத்தரவு காரணமாக, விவசாயிகள் குடியிருக்கும் பகுதியை விட்டு பக்கத்து கிராமத்திலோ, அருகிலுள்ள வேறு மாவட்டத்திலோ சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ சாகுபடி செய்து வரும் நிலம் உள்ள பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற முடியாமல் அலைகழிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அளித்துள்ள உத்தரவை தமிழக முதல்வர் ரத்து செய்து, பழைய முறைப்படியே விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.