

திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 291 வாக்குச்சாவடிகளிலும் திமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் வகையில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தர தேர்தல் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என வாக்குச்சாவடி முகவர்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் பஸ் நிலையம் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதிகளைச் சேர்ந்த முகவர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள் சீனி வாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உட்பட பலர் பங்கேற்றனர். தொகுதி தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் வரலாறு போற்றும் சாதனைகளையும், திமுக தமிழகத்துக்கு செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள 291 வாக்குசாவடிகளிலும் அதிமுகவுக்கு வெற்றியை அளித்து, திமுகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக டெபாசிட் இழக்கும் அளவுக்கு மட்டுமே வாக்குகளைப்பெற வேண்டும். அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ஓ.பன்னீச்செல்வம் கூறினார்.