Published : 27 Oct 2022 05:04 AM
Last Updated : 27 Oct 2022 05:04 AM

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான உயர்த்தப்பட்ட அபராதத் தொகை அமல்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதிக்கப்பட்டது. மேலும், புதிய போக்குவரத்து விதிகள் மற்றும் அபராதத் தொகை குறித்து பொதுமக்களிடம் போலீஸார் விளக்கினர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான உயர்த்தப்பட்ட புதிய அபராதம் நேற்று முதல் சென்னையில் வசூலிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்துகள் ஏற்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு, திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி 2019-ல் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி புதிய அபராத தொகையை பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தின. ஆனால் தமிழக அரசு கடந்த 19-ம் தேதிதான் இதுதொடர்பாக அரசாணை வெளியிட் டது. சென்னையில் 28.10.2022 முதல் புதிய அபராதத் தொகை வசூலிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்தார். மேலும், கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார். இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னதாகவே உயர்த்தப்பட்ட புதிய அபராதத் தொகை நேற்று முதல் சென்னையில் அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கரம் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1,000 (பழைய அபராதம் ரூ.100), ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் இருந்த வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தவர்களுக்கு ரூ.1000, பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.2,500, வாகனங்களில் தேவையற்ற மாற்றம் செய்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், வாகனம் உரிமம் தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம்,ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டினால் ரூ.1000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000, மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மட்டுமல்லாமல் அதுதெரிந்தே அவருடன் பயணித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று காலை முதல் உயர்த்தப்பட்ட புதிய அபராதத்தை வசூலிக்க ஆரம்பித்தனர். விதிமீறல் வாகன ஓட்டிகளை ஆங்காங்கே நிறுத்தி போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். உயர்த்தப்பட்ட அபராதத்தைக் கேட்டு பல வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, போக்குவரத்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததைக் காண முடிந்தது.

புதிய அபராதத் தொகையை வசூலிப்பதற்கு வசதியாக போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கும் கையடக்க இயந்திரங்களில் முன்னதாகவே மாற்றம் செய்திருந்தனர். விதிமீறலில் யாரும் ஈடுபட வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளையும் போக்குவரத்து போலீஸார் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x