மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் தடுப்பு, அடையாள பலகை வைக்க வேண்டும்: இறையன்பு அறிவுறுத்தல்

மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் தடுப்பு, அடையாள பலகை வைக்க வேண்டும்: இறையன்பு அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்புகள், அடையாள பலகைகள் வைப்பதை உறுதி செய்யுமாறு ஊரக வளர்ச்சித் துறை செயலருக்கு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஜாபர்கான்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி உதவி ஆசிரியர் முத்துகிருஷ்ணன், மழைநீர் வடிகாலில் விழுந்து உயிரிழந்தார். மழைநீர் வடிகால் பணிகள் நடந்த இடத்தில் தடுப்புகள் வைக்காததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் அமுதாவுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்துமாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர்வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடியாமல் உள்ளதால், பள்ளங்கள் மூடப்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவை சாமானிய மக்கள், பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. எனவே, மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும், குழிகளும் மூடப்படாமல் இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள், அடையாள பலகைகள் வைக்க வேண்டும்.சாலைகளில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘மேனுவல் கவர்’ திறந்திருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை அமைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in