Published : 27 Oct 2022 06:30 AM
Last Updated : 27 Oct 2022 06:30 AM
சென்னை: தீபாவளியைக் கொண்டாட சொந்தஊர் சென்றவர்களில் பலர் நேற்றுசென்னை திரும்பினர். இதனால்புறவழிச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அன்றைய தினம் முதலே பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் அரசுப்பேருந்துகள் மட்டுமின்றி ரயில்கள்,ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்கள் எனப் பல வாகனங்களில் ஊர்களுக்குச் சென்றனர்.
சென்னையில் அரசு பேருந்துகள் 6 முக்கிய இடங்களிலிருந்து இயக்கப்பட்டன. அக்.22-ம் தேதி முக்கியபேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இவ்வாறு சென்னையிலிருந்து அக். 21, 22, 23 ஆகிய தேதிகளில் மொத்தமாக இயக்கப்பட்ட 10,325 பேருந்துகளில் 5,63,541 பேர் பயணித்திருந்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் நெரிசலின்றி பயணித்தனர்.
சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவும் தீபாவளியன்றே (அக்.24) சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. அன்றைய தினம் வெகு சிலரே பயணிப்பார்கள் என்பதால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சுமார் 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் மூலம் வெகு சிலரே ஊர்களுக்குத் திரும்பினர். ஆனால் தீபாவளிக்கு மறுநாள் (அக்.25) பல்வேறு இடங்களிலிருந்து சென்னைக்கு 1,678 பேருந்துகளும், சென்னையைத் தவிர்த்து பிற இடங்களுக்கு 2,080பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றின் மூலம் ஏராளமானோர் பயணித்து பல்வேறு பகுதிகளை அடைந்தனர்.
அன்றைய தினம் மாலை முதலே சென்னைக்கு வரும் வாகனங்களால் புறவழிச்சாலை மற்றும் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதை ஏற்கெனவே எதிர்பார்த்த காவல் துறையினர், போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். குறிப்பாக நேற்று காலை பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வருவதோடு வழக்கமான பணிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லும் வாகனங்களால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைச் சீர்செய்யும் பணிகளில் சுமார் 300போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டனர். இதனால் பெரிதளவு நெரிசல்தவிர்க்கப்பட்டது. அதே நேரம்200-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன.மேலும், ரயில்களில் ஊர் திரும்பியவர்களால் நேற்று காலை தாம்பரம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இவ்வாறு சொந்த ஊர் சென்றவர்களில் பெரும்பாலானோர் நேற்றுகாலையே ஊர் திரும்பிய நிலையில்,நேற்றிரவும் வழக்கமான பேருந்துகளுடன் 1,984 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றிலும் 95 சதவீத இருக்கைகள் முன்பதிவு முடிந்த நிலையிலிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT