Published : 27 Oct 2022 07:13 AM
Last Updated : 27 Oct 2022 07:13 AM
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின்போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்குதலா ரூ. 21 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூர் சாலையில் சத்தியம் கிராண்ட் என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் கீழண்டைத் தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமார் (30), திருமலை(25) ஆகிய 3 பேரும் உள்ளே இறங்கியுள்ளனர். இவர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. அந்தக் கழிவுநீர் தொட்டியை ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த திருமலை என்பவரின் சகோதரிக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார். மூவரின் குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. பின்னர், ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்குதலா ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ.15 லட்சத்தை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகமும், ரூ.6 லட்சத்தை தமிழக அரசும் வழங்கும். இதுதவிர, இந்தக் குடும்பங்களுக்கு ஓய்வூதியமாக மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும், வீட்டுமனைப் பட்டாவும் அளிக்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் பொது மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விடுதி உரிமையாளரை அடுத்த 72 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது இயந்திரமயமாக்கப்பட்டு, மனிதர்கள் பயன்படுத்தப்படுவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இத்தகைய விழிப்புணர்வு பணியில் சமூக ஊடகங்களும், தமிழக அரசும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அருண் ஹல்தர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் சுனில்குமார், ஊர்க் காவல்படை சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு கூடுதர் காவல்துறை இயக்குநர் ஜெயராமன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT