Published : 27 Oct 2022 07:46 AM
Last Updated : 27 Oct 2022 07:46 AM
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனை வாடகைத் தாய்களிடம் ஒப்புதல் பெறுவதில் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால், விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை அமைந்தகரையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அரசு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாடகை தாய்மார்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக 16-ம்தேதி செய்தி வெளியானது.
இது தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்கக இயக்குநர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி,இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் நேற்று சமர்ப்பித்துள்ளனர். உயர்மட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அமைந்தகரையில் கடந்த 16-ம் தேதி நேரடிவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. அங்கு கர்ப்பிணிகள், வாடகைத்தாயாக செயல்பட்ட பெண்கள் குழந்தை பிறப்புக்கு பிந்தைய பராமரிப்பில் இருந்தனர்.
தற்போது, செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம் 2021 மற்றும் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் 2021 ஆகிய புதிய சட்டங்கள் இந்திய அரசிதழில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான விதிகள் கடந்தமார்ச் மாதம் 21-ம் தேதி வெளியிடப்பட்டு, அவ்விதிமுறை மீறல்களுக்கு உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு வாடகைத் தாயாக செயல்பட்ட அனைத்து தாய்மார்களின் வயது 25-க்கு மேல் உள்ளது மற்றும் அனைத்து தாய்மார்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. அனைத்து வாடகை தாய்மார்களும் முதல் முறையாக வாடகைத் தாயாக உள்ளனர். இவ்வாடகைத் தாய்கள் தம்பதியருக்கு உறவினராக இல்லை.
முந்தைய ஐசிஎம்ஆர் விதிமுறைகளின்படி இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வாடகைத் தாயாக சுமார் 6 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அத்தருணத்தில் ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் இருந்துள்ளன. அவ்வழிமுறைகளின்படி அவசிய செலவினங்களுக்கு மட்டும்வாடகைத் தாய்களுக்கு பணம் தரும் நடைமுறைக்கு வழிவகை இருந்தது. எனினும் புதிய வாடகைத்தாய் சட்டம் 2021-ன்படி ஏற்கெனவே வாடகைத் தாயாக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் தங்களது10 மாத கர்ப்ப காலத்தைத் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு மாறாக மருத்துவமனை நிர்வாகம் தாய்மார்களுக்கு அவசிய செலவினத்துக்கு பணத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. வாடகைத் தாயாக செயல்பட்டுவரும் தாய்மார்களிடம் ஒப்புதல் படிவம் அவரவர் தாய்மொழியில் பெறப்படவில்லை. வாடகைத் தாயாக செயல்பட்டு வரும் தாய்மார்களுக்கு காப்பீடு திட்டம் ஏதும் மருத்துவமனையில் செயல்படுத்தப்படவில்லை.
இந்த விதிமீறல்களுக்காக, அந்தமருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய காப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் அனைத்து செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப மையங்கள் மற்றும்வாடகைத் தாய் முறை சிகிச்சைஅளிக்கும் மருத்துவ நிறுவனங்களும் புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ் முறையான பதிவைப்பெற வேண்டும். வரும் நவம்பர் 25-ம் தேதிக்குபின்னர், மேற்கொள்ளப்படும் வாடகைத் தாய் நடைமுறைகளுக்கு செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம் 2021 மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை சட்டம் 2021மற்றும் உரிய விதிகள் முற்றிலும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT