2.5 லட்சம் செலுத்தலாம் என்பது மார்ச்சில் இருந்தா?

2.5 லட்சம் செலுத்தலாம் என்பது மார்ச்சில் இருந்தா?
Updated on
4 min read

ஐநூறும்.. ஆயிரமும்... உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ’தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் பதிவுசெய்திருந்த சந்தேகங்களுக்கு சேலம் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஆடிட்டர் வீ.ரவீந்திரன் பதில்கள் இங்கே..

அப்பா கணக்கில் செலுத்தலாமா?

எங்கள் அப்பா பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. எங்களிடம் சேமிப்பில் உள்ள ரூ. 7 லட்சத்தை அப்பாவின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் வருமான வரி செலுத்த வேண்டுமா? எங்கள் குடும்பத்தில் உள்ள 4 பேரின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை தனித்தனியாக பிரித்து டெபாசிட் செய்யலாமா?

- கார்த்திக், நாமக்கல்

உங்களது அப்பா விவசாயம் செய்திருந்தால் அந்த விவரம் தாலுகா சிட்டா - அடங்கலில் வந்துவிடும். அதன்படி உங்கள் அப்பாவின் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்தையும் விவசாய வருமானமாக செலுத்த முடியும். இதற்கு வரி வராது. அப்பாவின் கணக் கிலிருந்து அவரது வாரிசுகளான உங்களுக்கு தனித் தனியாக பண பரிமாற்றம் செய்யலாம். ஆனால், உங்களது கணக்கில் ஏற்கெனவே, வருமான வரி செலுத்தாத வேறு ஏதாவது இருப்பு இருந்தால் அதற்கு வரி வரும்.

செல்லாத நோட்டுகளை வாங்குவது குற்றமா?

வணிகர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு களை வாங்கக்கூடாது என்கிறீர்கள். பழைய நோட்டுகளை வணிகர்கள் தாங்களாக முன்வந்து பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை என நான் கருதுகிறேன். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

- பஷீருதீன், பேரணாம்பட்டு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு, ’அதை நான் வாங்குவேன்’ என்று நீங்கள் சொன்னால் ரிஸ்க் உங்களுடையது. இது தெரிந்திருந்தும் பல வணிக நிறுவனங்களில் நவம்பர் 8-க்கு முன்பாக வியாபாரம் செய்ததாக பில் போட்டு, செல்லாத நோட்டுகளை இன்னமும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி அரசு தரப்பிலும் தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லாததால், இத்தகைய பண பரிமாற்றங்களுக்கு எத்தகைய சிக்கல்கள் வரும் என்பது பின்னர் தான் தெரியவரும்.

கடன் தொகையை கணக்கில் போடலாமா?

தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் சகோதரியின் திருமணத்துக்காக ரூ.4 லட்சம் தனிநபர் கடன் வாங்கியுள்ளேன். அத்தோடு சேர்த்து தற்போது 5 லட்ச ரூபாய் வங்கியில் பணம் செலுத்தியுள்ளேன். இதனால் ஏதேனும் பிரச்சினை வருமா? மொத்தப் பணத்துக்கும் வரி கட்ட வேண்டுமா?

- சீனிவாசன், சென்னை

வருமான வரி சட்டம் பிரிவு 269 எஸ்.எஸ். பிரகாரம் ரூபாய் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகையை கடனாக வாங்கினால் கோடிட்ட காசோலை மூலமாகத் தான் வாங்க வேண்டும்; திருப்பிச் செலுத்த வேண்டும். நீங்கள் கடனைப் பணமாக பெற்றிருந்தால் நூறு சதவீதம் அபராதம் செலுத்த நேரிடலாம். முறையாக கடன் பெற்றிருந்தும் நீங்கள் கூடுதலாக ஒரு லட்சத்தை செலுத்தினால் அதற்கான வருமான கணக்கு கேட்கப்படலாம்.

வந்த 10 லட்சத்தை வங்கியில் செலுத்தலாமா?

எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததால் கடந்த 4 மாதங்களுக்கு முன் எனக்கு ரூ.10 லட்சம் கிடைத்தது. வங்கியில் இருந்த அந்தப் பணத்தை எடுத்து வட்டிக்கு கொடுத்திருந்தேன். இப்போது அதை முழுவதுமாக வங்கியில் செலுத்தலாமா?

- பெயர் குறிப்பிடாத வாசகர்

அந்த பத்து லட்சம் வந்ததற்கான வருமான வழி என்ன? செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான பிறகு, ஒருவர் 13 லட்ச ரூபாய் செலவில் திருமணம் நடத்திவிட்டு மொய் வருமானம் ரூ. 1.25 கோடி வந்ததாக கணக்குக் காட்டுகிறார். இதை எப்படி நம்புவார்கள். அதுபோல, உங்களுக்கு பத்து லட்சம் வந்தது குறித்து நீங்கள் சொல்லும் காரணம் ஏற்கும் படியாக இருந்தால் ஏற்றுக்கொள்வார்கள். இல்லாத பட்சத்தில் உங்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தவரின் சட்டப்பூர்வமான வாரிசுதாரருக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பும்.

டெபாசிட்டை கணக்கில் செலுத்தலாமா?

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான நான் ஏற்கெனவே வங்கியில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்துள்ளேன். வரும் டிசம்பருக்குள் அந்த டெபாசிட் முதிர்வு அடையும்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 5.5 லட்சம் கிடைக்கும். அதை மீண்டும் வங்கியில் செலுத்தினால் வரி கட்டவேண்டுமா?

- மணி, திருநெல்வேலி

5 லட்ச ரூபாய்க்கு வரி வராது. உங்களது ஆண்டு பென்ஷன் தொகை இரண்டு லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் கூடுதலாக செலுத்தும் ரூ. 50 ஆயிரத்திற்கும் வரி வராது. நீங்கள் 60 வயதை கடந்தவராக இருந்தால் ஆண்டிற்கு ரூ.3 லட்சம் வரை வங்கியில் செலுத்தலாம்; வரி கேட்கமாட்டார்கள்.

மூன்று கணக்குகளில் 4 லட்சம் இருக்கலமா?

எனது பெயரில் உள்ள மூன்று வங்கிக் கணக்குகளில் மொத்தமாக சேர்த்து ரூ. 4 லட்சம் இருப்பு வைத்துள்ளேன். இப்போது இதற்காக நடவடிக்கை ஏதும் வருமா? கூடுதலாக பணம் போடலாமா?

- வெங்கடேஷ்

இந்த 4 லட்சமானது நீண்ட கால சேமிப்பாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே, மூன்று நாளைக்கு முன்பு கொண்டுபோய் மொத்தமாக போட்டிருந்தால் சந்தேகிப்பார்கள். உங்களது கணக்கில் கூடுதலாக பணம் செலுத்தலாம். ஆனால், அதற்கு முன்பாக முறையான வருமான கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக செலுத்தும் பணத்துக்கெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வருமான வரி துறைக்கு உரிய பதிலைத் தந்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

14 ஆண்டுகளில் சேமித்த 7 லட்சத்திற்கு வரி வருமா?

என் மனைவி பெயரில் உள்ள வங்கி கணக்கில் 14 ஆண்டுகளாக உள்ள சேமிப்பில் ரூ.7 லட்சம் இருப்பு உள்ளது. நாங்கள் வருமான வரிக்கு உட்படவில்லை. இப்போது வரி கேட்பார்களா?

- பெயர் குறிப்பிடாத வாசகர்

14 ஆண்டுகளாக சிறிது சிறிதாக சேமிக்கப்பட்ட பணமாக இருக்கும் பட்சத்தில் வரி கேட்க மாட்டார்கள்; பயப்பட வேண்டாம்.

2.5 லட்சம் செலுத்தலாம் என்பது மார்ச்சில் இருந்தா?

வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால் கணக்கு காட்ட வேண்டும் என்பது நவம்பர் 8-ம் தேதிக்கு பின்பா அல்லது மார்ச்சிலிருந்து செலுத்திய பணத்திற்கும் இந்த நடைமுறை பொருந்துமா?

- வினோத்குமார், கோயம்புத்தூர்

ரூ. 2.5 லட்சம் என்பது ஒரு நிதியாண்டிற்கு வரு மான வரி விலக்கு அளிக்கப்பட்ட உங்களது வருமான வரம்பு. இது ஏப்ரல் 1, 2016-லிருந்து மார்ச் 31, 2017 வரையிலான காலகட்டம். இந்த காலத்திற்குள் நீங்கள் ஈட்டும் ரூ.2.5 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு உண்டு. இப்படித்தான் அர்த்தமே தவிர, முன்பு கட்டிய பணத்தை எல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்கள். இப்போது 2.5 லட்சம் வரை கட்டலாம் என பொருள் கொள்வது தவறு.

ஓ.டி. இருக்கும்போது 7 லட்சம் செலுத்தலாமா?

எனக்கு வங்கியில் ரூ.10 லட்சம் ஓ.டி. அக்கவுண்ட் உள்ளது. தற்போது ரூ.7 லட்சம் வங்கியில் செலுத்தினால் ஏதேனும் பிரச்சினை வருமா?

- கமலக்கண்ணன், சேலம்

ஓ.டி. கணக்கில் உங்களது வங்கிக் கணக் கிலிருந்து பணத்தை எடுத்துக் கட்டினால் பிரச்சினை இல்லை. மற்றவரிடம் வாங்கிக் கட்டினால் சிக்கல் வரும். பினாமி பரிமாற்ற தடை திருத்த சட்டத்தின்படி, ஒருவர் பணத்தை மற்றவர் கணக்கில் செலுத்தினால் அந்தப் பணம் அரசுடமை ஆவதுடன் அதற்கு 25 சதவீதம் அபராதமும் கேட்பார்கள். மேலும், பணத்தை கொடுத்தவருக்கு 7 ஆண்டுகளும் செலுத்தியவருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனைக்கும் வாய்ப்பிருக்கிறது.

கூட்டுறவுக் கடனை அடைக்க முடியுமா?

கூட்டுறவு வங்கியில் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளேன். சேமிப்பு கணக்கில் செலுத்தி தான் அந்தக் கடனை அடைக்க முடியும். தற்போது ரூ.7 லட்சம் சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்தால் வருமான வரி செலுத்த வேண்டுமா?

- பெயர் குறிப்பிடாதவர்

கடனை வாங்கி அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு கடனை அடைப்பது தவறில்லை. ஆனால், கடன் தொகையை ஒரு சொத்திலோ அல்லது நிறுவனத்திலோ முத லீடு செய்துவிட்டு, இப்போது வேறொரு பணத் தைக் கொண்டு கடனை அடைத்தால் கண்டிப் பாக வருமான வரி துறை கேள்வி கேட்கும்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in