

விழுப்புரம்: விழுப்புரம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில், முறை கேடு நடைபெறுவதாகக் கூறி, தாயுடன் மாணவி தீக்குளிக்க முயன்றார்.
விழுப்புரம் சாலாமேட்டில் அரசு எம்ஜிஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில், 2022-23-ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்றது. மாணவிகள் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக பெற்றோர் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நேற்று மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோருடன் கல்லூரிக்கு வந்தனர். அப்போது சேர்க்கை முடிந்து விட்டதாக கூறப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் அருகே கொண்டங்கி கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற மாணவி, தனது தாய் தமிழ்செல்வி, உறவினர் ஸ்ரீதர் ஆகியோருடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே கல்லூரி நிர்வாகத்தினர் மாணவி பிரவீனா உள்ளிட்ட 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
இது குறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், மாணவி பிரவீனா தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
குறைந்த மதிப்பெண்: அப்போது மாணவியின் தாய் தமிழ்செல்வி கூறியது, "எனது மகள் பெற்ற மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் பெற்ற சில மாணவிகளுக்கு, பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. ஆடு மேய்க்கும் தொழில் செய்வதால் எனது மகளை தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க முடியாத நிலையில் உள்ளேன். அரசுக் கல்லூரியில் எனது மகளுக்கு சேர்க்கை வழங்க வேண்டும்" என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்றது குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் ஒருவர், மாணவர் சேர்க்கைக்கு பணம் பெற்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது