பாதுகாப்பு காரணங்களால் தமிழகத்துக்கு புதிய ரூ.500 நோட்டு எப்போது வரும் என்று கூறமுடியாது: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம்

பாதுகாப்பு காரணங்களால் தமிழகத்துக்கு புதிய ரூ.500 நோட்டு எப்போது வரும் என்று கூறமுடியாது: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம்
Updated on
1 min read

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை சப்ளை செய்யக் கோரி செஞ்சியைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் குறித்து ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. அப்போது நடந்த வாதம்:

கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர் எல்.பி.சண்முக சுந்தரம்: புதிய ரூபாய் நோட்டு பிரச்சினையால் கூட்டுறவு வங்கி களில் பரிவர்த்தனை முடங்கி விட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தனக்கு கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயத் தொழிலாளர்கள் பணம் பெற முடியவில்லை.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன்: பழைய நோட்டுகள் செல்லாதது, பணப் பரிமாற்றம் தொடர்பாக வேறு நீதிமன்றங்கள் தடை பிறப்பிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பணம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது தவறு. கிஸான் அட்டை மூலம் ரூ.24 ஆயிரம் வரை விவசாயிகள் எடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன்: கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் உள்ளது. போதிய ரூபாயை வங்கிகளுக்கு அனுப்பிக்கொண்டு தான் இருக்கிறோம். பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது. வேண்டுமென்றால் அதை ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்.

இவ்வாறு வாதம் நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘வெளிநாடுகளில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும் தேச விரோதிகள் உள்ளனர். எனவே ரிசர்வ் வங்கி தரப்பு பதிலை ஏற் கிறேன். அதேநேரம், 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப் பால் 2 அல்லது 3 நாட்களுக்கு பொது மக்களுக்கு பாதிப்பு இருக்கும். அதன்பிறகு நிலைமை சகஜமாகிவிடும் என எதிர்பார்க் கப்பட்டது. இந்த பிரச்சினை இப் போதைக்கு முடிவுக்கு வராது என்பதுபோல உள்ளது. நாட்டின் நலன் கருதி போதுமான முன் னெச்சரிக்கை நடவடிக்கையை தெளிவாக திட்டமிட்டு எடுத்திருக்க வேண்டும். அதை மத்திய அரசு சரியாகச் செய்யவில்லை. அதனால் தான் பொதுமக்கள் பாதிக்கப்படு கின்றனர்’’ என்று கூறிய நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in