Published : 27 Oct 2022 04:25 AM
Last Updated : 27 Oct 2022 04:25 AM

இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மனித உரிமை ஆணையத்தில் முறையிட ராமேசுவரம் மீனவர்கள் தீர்மானம்

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் முறையிட ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட நாட்டுப் படகு சங்கத் தலைவர் எஸ்.பி. ராயப்பன் தலைமையில் நடந்தது.

ராமேசுவரம் விசைப்படகு சங்கத் தலைவர் சகாயம், மண்டபம் விசைப்படகு சங்கத் தலைவர் சக்கிரியாஸ், தங்கச்சிமடம் மீனவத் தலைவர் மார்கஸ், பாம்பன் மீனவத் தலைவர் சந்தியா, ஆழ்கடல் மீன்பிடி சங்கத் தலைவர் ஆனந் பாய்வா, மீனவ மகளிர் தலைவி லோவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அக்.21 அன்று தமிழக மீனவர் வீரவேலை துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடற்கரை மேலாண்மைச் சட்ட திருத்த வரைபடம் 2019ல் மீனவக் கிராமங்கள், வாழ்விடப்பகுதிகள், பயன்பாட்டுப் பகுதிகள் மற்றும் மீன்பிடிப் பகுதிகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மீனவர்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், கடலில் பேனா சிலை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், தமிழக அரசு அமைத்துள்ள காலநிலை மாற்றக் குழுவில் மீனவர்களையும் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை தேசிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி ஒருங்கிணைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x