

நூலக வார விழா நேற்று முன் தினம் தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகள் நூலகத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.200 கோடியை தாண்டியுள்ளதால் நூலக வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,532 நூலகங்கள் உள்ளன. இவற்றில் மாநில நூலகங்கள் 2, மாவட்ட மைய நூலகங்கள் 32, கிளை நூலகங்கள் 1,925, நடமாடும் நூலகங்கள் 10, ஊர்ப்புற நூலகங்கள் 1,821, பகுதி நேர நூலகங்கள் 742 உள்ளன. இவற்றில், 1,711 நூலகங்கள் மட்டுமே சொந்தக் கட்டிடங்களில் செயல்படுகின்றன.
நூலக வளர்ச்சிப் பணிகளுக் காக, உள்ளாட்சி அமைப்புகளில் வீட்டு வரி செலுத்தும்போது, அதில் இருந்து 10 சதவீதத் தொகை நூலக வரியாக வசூல் செய்யப்படுகிறது. இத்தொகையை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செலுத் தாததால் நூலகத் துறையின் வளர்ச்சியில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ராம் கூறும்போது, “தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, கடந்த 2012-ம் ஆண்டே நூலகத் துறைக்கு நிலுவைத் தொகை ரூ.120 கோடியாக இருந்தது. நடப்பாண்டில் அது ரூ.242 கோடியை எட்டியிருப்பதாக தகவல் தந்துள்ளனர். இந்த வரியை வசூலிக்கச் சொல்லி, நூலக பணியாளர்களைத்தான் கட்டாயப் படுத்துகிறார்களே தவிர, அரசு மட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு களிடம் இருந்து அதனை வசூல் செய்வதற்கான ஆக்கபூர்வ பணிகளை முன்னெடுக்கவில்லை.
நூலகத் துறை கடந்த 6 ஆண்டு களாக நிரந்தர இயக்குநர் இல்லா மல் செயல்பட்டு வருகிறது. இப்போது கல்வித் துறை இயக்கு நர்தான் கூடுதல் பொறுப்பாக நூலகத் துறையையும் கவனித்து வருகிறார். உள்ளாட்சிகள் இந்த நிதியை அரசு கணக்கில் செலுத்தச் செய்து, ஆண்டுதோறும் அரசு மட்டத்தில் திட்ட ஒதுக்கீடு செய் தால் நூலகத் துறை வளரும். அடிப்படை கட்டமைப்பு வசதி கள்கூட இல்லாத நூலகங்கள் நிலையும் மாறும்.
நூலக ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்து வகை செலவுகளுக்கும் சேர்த்து ஒரு மாவட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி வரையே இப்போது செலவாகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கும் நூலக வரியை, அந்தந்த மாவட்ட நூலகங்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற விதியும் பின்பற்றப்படுவதில்லை.
தமிழகத்தில் 32 மாவட்ட நூலக அலுவலர் பணியிடங்களில் 26 பணியிடங்களில் பொறுப்பு அலுவலர்களே உள்ளனர். நூலக வார விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவைத் தொகையை முழுமையாக வசூ லித்து, நூலகங்களின் அடிப் படை கட்டமைப்புகளை உருவாக் கினால் தமிழகத்தில் மிக அதிக வாசிப்பாளர்களை உருவாக்க முடியும்” என்றார்.