“கோவை சம்பவம் - என்ஐஏ விசாரணைக்கு அரசு பரிந்துரைத்ததை வரவேற்கிறோம். ஆனால்...” அண்ணாமலை

அண்ணாமலை | கோப்புப் படம்
அண்ணாமலை | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு தமிழக முதல்வர் பரிந்துரைத்ததை வரவேற்பதாக கூறியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

கோவை - உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றிட பரிந்துரைத்தும், கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திடவும் தமிழக மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை வரவேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர், தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை பாஜக வரவேற்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம். தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள். தமிழக காவல் துறையின் உளவுத் துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள். திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு காவல் துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.

நீங்கள் பதவி ஏற்கும்போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் உறுதுணையாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in