

கோவை: ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உட்பட கோவையில் 5 இடங்களில் பயங்கர தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என கார் வெடி விபத்தில் உயிரிழந்த முபினின் வீட்டில் சிக்கிய டைரியை முன்வைத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவை கோட்டைமேட்டில் நடந்த கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தினர். அதில், அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடி மருந்துகள் 75 கிலோவும், வயர்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதேபோல், அவரது வீட்டில் முபினின் டைரியையும் போலீஸார் கண்டறிந்தனர்.
டைரியில் தகவல்கள்: அந்த டைரியில் ஏதாவது எழுதப்பட்டுள்ளதா என போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த டைரியில் சங்கேத குறியீடுகள், பல்வேறு இடங்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டு இருந்தன. குறிப்பாக, சுற்றுலாத் தளங்கள் என்ற சங்கேத குறியீட்டு பெயரில் கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம் விக்டோரியா ஹால், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இது போலீஸாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
காரில் பதுக்கி வெடிக்கத் திட்டம்: ஏனெனில், மேற்கண்ட 5 இடங்களும் சுற்றுலாத் தளங்கள் அல்ல. அதில் 3 இடங்கள் முக்கிய அரசு அலுவலகங்கள் ஆகும். முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள கோவை ரயில்நிலையம் மிக முக்கிய இடமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அதேபோல், 5-வதாக குறிப்பிடப்பட்டுள்ள ரேஸ்கோர்ஸ் மக்கள் நெருக்கும் அதிகம் இருக்கும் பகுதியாகும். குறிப்பாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் தினமும் காலை முதல் இரவு வரை பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தினமும் ஏராளமான பொதுமக்களும், அரசு அலுவலர்களும் வந்து செல்கின்ற இடங்களாகும். எனவே, அதிக உயிரிழப்பு ஏற்படும் வகையில், மேற்கண்ட 5 இடங்களிலும், காரில் வெடிமருந்துகளை பதுக்கி, மக்கள் கூடும் போது வெடிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என போலீஸாருக்கு தெரியவந்துள்ளதாம்.
சந்தேகம் வராத வகையில்... - பட்டதாரி இளைஞரான ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். யாருக்கும் தன் மீது சந்தேகம் வராதபடி செயல்பட்டு வந்த முபின், அடிக்கடி தனது தொழிலையும் மாற்றி வந்துள்ளார் என்பதையும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினரின் வழிகாட்டுதலின்படி, யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்கும் முறைகளை அவர் கற்றுள்ளார் என்பதையும் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
உயிரிழந்த ஜமேஷா முபின் மற்றும் கைதான அவரது கூட்டாளிகளின் செல்போன்களை பறிமுதல் செய்துள்ள தனிப்படை போலீஸார் அதில் உள்ள அழிக்கப்பட்ட வாட்ஸ் அப் பதிவுகள், அழிக்கப்பட்ட கூகுள் பதிவுகள் ஆகியவற்றை மீட்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.