Published : 26 Oct 2022 12:28 PM
Last Updated : 26 Oct 2022 12:28 PM

மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு

மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகள் 4 நாட்கள் அடைக்கப்படுகின்றன.

தேவர் ஜெயந்தி அக்.30-ல் வருகிறது. அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து அஞ்சலி செலுத்துவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்பதால் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க 144 தடை உத்தரவு, டாஸ்மாக் கடைகள் அடைப்பு உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென் மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து வருகின்றனர். இதன்படி மதுரை மாவட்டத்தில் நாளை (அக்.27) முதல் அக்.30-ம் தேதி வரை 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. இதற்கான உத்தரவு அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.28 முதல் அக்.30 வரை 3 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்படும். இதற்கான உத்தரவு நாளை (இன்று) வெளியிடப்படும்’ என்றார். சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு நாளை (அக்.27) டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. தேவர் ஜெயந்திக்காக எத்தனை நாட்கள் அடைக்கப்படுகின்றன என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த தென் மாவட்டங்களிலிருந்து மதுரை வழியாக வாகனங்கள் சென்று திரும்புவதால் மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 4 நாட்கள் விடுமுறை விடப்படுவது தொடர்கிறது என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x