

கோவை: "கோவையில் சம்பவம் நடந்த இந்த இடத்தில், முதல்வர் வந்து பார்வையிடாதது மட்டுமல்ல, இதுவரை வாய்திறக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் மாநிலத்தின் முதல்வர், கோவையை இன்னும் பழிவாங்கும் எண்ணத்தோடுதான் நடத்துகிறாரா? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " தமிழக முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து கூறவில்லை என்றால்கூட பரவாயில்லை, கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு முன்பாக ஏற்கெனவே ஒரு குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மாநகரம். 98 குண்டுவெடிப்புக்கு பின்னர்கூட இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ், பாஜகவின் பல்வேறு தலைவர்களை இந்த மண்ணிலே நாங்கள் பலிகொடுத்திருக்கிறோம்.
இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் நடைபெறுகின்ற இந்த இடத்தில், முதல்வர் வந்து பார்வையிடாதது மட்டுமல்ல, இதுவரை வாய்திறக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் மாநிலத்தின் முதல்வர், கோவையை இன்னும் பழிவாங்கும் எண்ணத்தோடுதான் நடத்துகிறாரா? என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
எல்லாவற்றுக்கும் பத்திரிகை அறிக்கை கொடுக்கின்ற முதல்வர், தங்களது அமைச்சர்கள் வாயிலாக பதிலளிக்கின்ற முதல்வர் இந்த சம்பவம் குறித்து ஏன் வாயை திறக்க மறுக்கிறார். காவல்துறையினரின் புலனாய்வு மற்றும் அவர்களுடைய செய்தியாளர்கள் சந்திப்புகள் எல்லாம் நடைபெறுகிறது. டிஜிபி ஆய்வு, கைது நடவடிக்கைகள் எல்லாம் சரி. ஆனால் முதல்வர் மவுனம் மட்டுமே கேள்விக்குறி
இந்த மக்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். இம்மாதிரியான செயல்களை ஒருபோதும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம். இதுபோன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், இந்த இயக்கங்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பவர்கள், சிறையில் இருந்தபடி இதுபோன்ற செயல்களை தூண்டுவிடுகிற, திட்டம் தீட்டுகின்ற நபர்கள், தமிழகத்தில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர் என்பது முதல்வருக்கு தெரியுமா? என்று தெரியவில்லை.
உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. 75 கிலோ வெடிமருந்து, சிசிடிவி காட்சிகளை பார்க்கும்போது மனதெல்லாம் பதறுகிறது. தமிழக காவல்துறையும், தமிழக முதல்வரும், உடனடியாக தமிழக மண் பயங்கரவாத செயல்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்றால், இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக முதல்வர் இதில் கவுரவம் பார்க்க வேண்டாம்" என்று அவர் கூறினார். .