

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடித்தது உட்பட பல்வேறு காரணங்களால் 284 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்தின்போது, அதிகாலை முதலே பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் கொண்டாடினர். தமிழக அரசு பட்டாசு வெடிப்பதில், பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து, எச்சரித்தபோதிலும், பல இடங்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தையும் மீறி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். இந்நிலையில், பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடியபோது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான தீ விபத்துகள் ஏற்பட்டன.
அந்தவகையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி காலை முதல் இரவு 12 மணி வரை 284 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் 2-வது தெருவில் ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான 2 மருந்து குடோன்களில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு அசோக்நகர், தியாகராய நகர், தேனாம்பேட்டையில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், 2 சிறிய ரக சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் தீக்கிரையானது. பட்டாசு தீப்பொறி பட்டு தீவிபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் அஜிஸ் முல்க் தெருவில் நேற்று முன்தினம் காலை 4 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. பட்டாசு தீப்பொறி பட்டு வாகனங்கள் தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். திருவொற்றியூர் ராஜா சண்முகம் 9-வது தெருவில் சேகர் என்பவரது வீட்டின் மாடியில் மல்லிகா (65) என்ற மூதாட்டி வசித்து வந்தார். பட்டாசு விழுந்து குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் பலத்த காயமடைந்த மல்லிகா நேற்று உயிரிழந்தார். மேலும், அன்னை சுந்தரி நகரில் பட்டாசு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு 6 வீடுகள் சேதமடைந்தன. அந்த வகையில் சென்னையில் மட்டும் 180 தீ விபத்துகள் ஏற்பட்டன. தமிழகம் முழுவதும் பட்டாசு காரணமாக ஏற்பட்ட தீ விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.