

குன்னூர்: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் பின்னணி குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த உமர் பாரூக்(35) என்பவரை போலீஸார் விசாரணைக்காக கோவைக்கு அழைத்துச் சென்றனர்.
செல்போன் சிக்னல் செயல்பாடு அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாகவும், இவர் குன்னூர் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் வந்து வீடு எடுத்து தங்கி உள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்தனர். நேற்று இதே பகுதியில் வசிக்கும் மற்றொருவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவரையும் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.