

சென்னை: சென்னை, ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னை மாநகராட்சி மட்டுமின்றி நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை ஆகியன சார்பிலும்மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் குறுகிய காலத்துக்குள் முடிக்கும் பணியல்ல. நீண்டகால இலக்கைக் கொண்டும்சில பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறான பணிகளை மழைக் காலத்துக்குப் பிறகு தொடங்க அறிவுறுத்தியுள்ளோம். நெடுஞ்சாலைத் துறை சார்பில் வால்டாக்ஸ் சாலை, அசோக் நகர் முதல் அடையாறு வரை மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளன. சில முடியும் நிலையில் உள்ளன. சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து வேறு ஒரு துறையின் கீழ் வடிகால் பணி நடைபெறும் இடத்தில் விபத்து நடந்துள்ளது. இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. பணிகள் நடைபெறும் இடத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளோம். சரிவர பணிகளைச் செய்யாத ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தையே ரத்து செய்யும் அளவுக்கு உத்தரவு போட்டுள்ளோம். அதே நேரம் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் தடுப்புகளை அகற்றக் கூடாது. இவ்வாறு அகற்றப்படும் தடுப்புகள் குறித்து 1913 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.
அரசும்,பொதுமக்களும் ஒருசேர முயற்சி செய்தால் மட்டுமே திட்டப் பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். இது தொடர்பாக முதல்வர் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். மழைநீர் வடிகால் பாதுகாப்புப் பணிகளில் அரசு கவனத்துடன் செயல்படுகிறது. பணிகள் முடிந்த இடங்களில் நல்ல சாலைஅமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடத்தை கணக்கில் கொண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனமழை பெய்தால் நீர் தேங்கும். ஆனால் அது உடனடியாக வடிவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.