பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை தாண்டியது: வியாபாரிகள் தகவல்

பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை தாண்டியது: வியாபாரிகள் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பட்டாசு விற்பனை ரூ.200 கோடியைத் தாண்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகைக்கு ஒருமாதத்துக்கு முன்பே பட்டாசு விற்பனை களைகட்டத் தொடங்கிவிடும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால், தீபாவளி பெரிய அளவில் பொதுமக்களால் கொண்டாடப்படவில்லை. இதனால் பட்டாசு விற்பனையும் வழக்கத்தை விட மந்தமாகவே இருந்தது. தற்போது, கட்டுப்பாடு எதுவும் இல்லாததால், பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடினர். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக பட்டாசு விற்பனையில் சற்று மந்த நிலை இருந்தாலும், கடைசி வாரத்தில் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது.

பல்வேறு சிறப்புத் தள்ளுபடிகளை பட்டாசு விற்பனையாளர்கள் அறிவித்திருந்ததால், பொதுமக்களும் ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். குறிப்பாக சிவகாசியிலிருந்து பலர் நேரடியாகச் சென்னைக்கு வந்து தள்ளுபடி விலையில் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை உட்பட தமிழகத்தின் சில இடங்களில் இரவு 10 மணியைக்கடந்தும் கடைகளில் பட்டாசு விற்பனை நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை கடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ரூ.35 கோடி முதல் ரூ.45 கோடி வரை மட்டுமே பட்டாசு விற்பனை நடந்ததாகவும், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பி ரூ.200 கோடியை கடந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர் சங்கத் தலைவர் அனீஸ்ராஜா கூறும்போது, "சென்னை தீவுத்திடலில் வியாபாரிகள் எதிர்பார்த்ததைப் போல 95 சதவீதபட்டாசுகள் விற்பனையாகியுள்ளன. பசுமை பட்டாசுகளும், 25 சதவீத தள்ளுபடி விலையிலும் பட்டாசுகள் விற்கப்பட்டது இதற்கு காரணமாகும். அதேபோல், தமிழகம் முழுவதும் 65 சதவீத பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in