

சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பை காவல்துறை விரைவாகவிசாரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: கோவை கார்வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. இக்கொடிய சம்பவம் தீபாவளிக்கு முந்தைய நாள் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிக்கிறது. கொடூரமான செயல் செய்வதற்கு தீவிரமுயற்சி எடுத்து, அதை நடைமுறைப்படுத்த முனைந்தபோது அது தோல்வி அடைந்துள்ளது. தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எந்த பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கோவையில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் சிலிண்டர் வெடிப்புக்கு பின்னணியில் தீவிரவாத நடவடிக்கை திட்டமிடப்பட்டிருக்கிறதா என்பதை காவல் துறையினர் விரைவாக விசாரித்து உண்மைகளை கண்டறிய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கோவையில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் இறந்தது குறித்து நடைபெற்ற விசாரனையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு பிறகு பல சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளது. இதில் கைதானவர்களின் பின்னணி, அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை காவல்துறையினர் விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சட்டம்–ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும். இனி, தமிழகத்தின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: கோவை சம்பவம் பின்னணியில் ஏதேனும் தீவிரவாத விஷமச் செயல்கள் இருக்குமாயின் அது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் இருப்போர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் எந்தமூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளைவிட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிய வேண்டும்.
வி.கே.சசிகலா: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், எவ்வித புற அழுத்தங்களுக்கும் இடம் அளிக்காமல், துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.