

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிகிறது. 3 தொகுதிகளிலும் இதுவரை 6 பெண்கள் உட்பட 74 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில், மனுக்கள் நாளை பரிசீலிக்கப்படுகின்றன.
கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. அதிக அளவில் பணப் பட்டுவாடா புகார் எழுந்ததால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, மரணமடைந்ததால் அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 26-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றே, வேட்புமனுத் தாக்கலும் தொடங்கியது. 28-ம் தேதி வரை 3 நாட்களில் 27 மனுக்கள் தாக்கலாகின.
அதன்பின், 29-ம் தேதி தீபாவளி, 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படவில்லை. 31-ம் தேதியில் இருந்து மீண்டும் மனுக்கள் பெறப்பட்டன. நேற்று மாலை நிலவரப்படி, அரவக்குறிச்சியில் 29 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 31 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். தஞ்சையில் 13 ஆண்கள், 3 பெண்கள் என 16 பேரும் திருப்பரங்குன்றம் தொகு தியில் 26 ஆண்கள், ஒரு பெண் என 27 பேரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். 3 தொகுதிளிலும் சேர்த்து 68 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 74 மனுக்கள் தாக்கலாகி இருந்தன.
பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துவிட்டனர். பாஜக வேட்பாளர்கள் இன்னும் மனுத் தாக்கல் செய்யவில்லை. தேமுதிக, பாமக வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும். இதனால் பாஜக, தேமுதிக, பாமக வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல் செய்யலாம் என தெரிகிறது. இன்று மாலை 5 மணியுடன் மனுத் தாக்கல் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (3-ம் தேதி) நடக்கிறது. தேர்தல் பொதுப் பார்வை யாளர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மனுக்களை பரிசீலிப்பர். இதற்காக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட் டுள்ள பொதுப் பார்வை யாளர்கள் இன்று மாலை 3 தொகுதிகளுக்கும் செல்கின்றனர். போட்டியிட விரும்பாதவர்கள், 5-ம் தேதி மாலைக்குள் மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நவம்பர் 24-ம் தேதியுடன் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில், போட்டியிட மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கும் வருமான வரித்துறையினரால் கண்காணிக் கப்பட்டு வருகிறது. மேலும், மனுத் தாக்கல் செய்த நாளில் இருந்து வேட்பாளர் செய்யும் செலவுகளை, அதற்கென நியமிக் கப்பட்டுள்ள செலவின நுண் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் நடக்கும் தொகுதிகள் அடங்கிய மதுரை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில்..
புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஜான்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காலியாக உள்ள அந்தத் தொகுதிக்கும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.