

தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுகவை கண்டித்து பாஜக சார்பில் நாளை தமிழகம்முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
அந்த வகையில் கடலூரில்தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவிருப்பதாக பாஜகவின் மாநில ஊடகப் பிரிவு செயலாளர் தர் தெரிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் தினத்தில், கடலூர் மாவட்ட திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை பாஜக பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக வினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வடலூரைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அவர்களை பாஜக பக்கம் இழுத்துள்ளனர். இது தவிர கடந்த வாரம் கடலூர் வந்த மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபேலா, தேவனாம் பட்டினத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிவிட்டுச் சென்றார்.
அப்போது தேவானாம்பட்டினத்தைச் சேர்ந்தமுக்கிய திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசியதாகவும், அவரும்நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை முன் பாஜகவில் சேரவுள்ளதாகவும் பாஜகவினர் பேசி வருகின்றனர். இது தவிர கடலூர் மாநகராட்சியில் உள்ள அதிருப்தி திமுககவுன்சிலர்கள், கட்சிப் பதவி கிடைக்காத விரக்தியில் உள்ளவர்களையும் பாஜகவினர் சந்தித்துபேசி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.