

கோவை: கோவை கோட்டைமேட்டில் கார் வெடித்த வழக்கு விரைவில் என்.ஐ.ஏ பிரிவுக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணிக்கு கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் கார் 2 துண்டாக உடைந்து, உருக்குலைந்து கிடந்ததையும், சத்தத்தையும் வைத்து போலீஸார் விசாரிக்கும் போது, காரில் வெடிமருந்துகள் கிலோ கணக்கில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது உபா எனப்படும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பொதுவாக, சட்ட விரோத செயல்கள் தொடர்பான வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அதிகாரிகளால் விசாரிக்கப்படுவது வழக்கம். அதேபோல், பொதுவாக உபா சட்டப்பிரிவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கின் முழுமையான விசாரணை அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில காவல்துறையால் வழங்கப்படும்.
அதை ஆய்வு செய்யும் உள்துறை அமைச்சகத்தினர், அந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்கலாமா, வேண்டாமா என முடிவு செய்வர். தற்போதைய சூழலில், வெடிமருந்துகள் பயன்பாடு, சதித்திட்டம் போன்றவை இவ்வழக்கில் தொடர்புள்ளதால், கார் வெடிவிபத்து வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு விரைவில் மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.